'உடல் எடையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்' என்று விரும்புபவர்கள், 'நாள் முழுவதும் அசதியின்றி உழைக்க வேண்டும்' என்ற எண்ணம் உடையவர்கள் மட்டுமின்றி, அனைவரும் காலை உணவு உட்கொள்வது அவசியம்.
அவசர அவசரமாக பள்ளி, கல்லூரிக்குக் கிளம்பும் மாணவர்கள், வேலைக்குச் செல்வோர்கள், குடும்பத்தினருக்குப் பணிவிடை செய்வோர்கள் என்று பல தரப்பினரும் அலட்சியம் காட்டுவது காலை உணவில்தான்.
நேரமின்மையால், காலை உணவை தவிர்த்துவிட்டு செல்பவர்கள், மிகுந்த இன்னலுக்கு ஆளாவார்கள் என்கின்றனர், மருத்துவர்களும் உணவியல் நிபுணர்களும்.
8 மணி முதல் 12 வரையிலான கால நேரத்தில், எவ்வித உணவையும் உண்ணாமல் வயிறு காலியாக இருக்கும் நிலையில் காலையில் எழுகிறோம். அவ்வாறு, காலியான வயிற்றை துரிதமாக நிரப்ப வேண்டியது கட்டாயம். எனவேதான், காலை உணவை ஆங்கிலத்தில் ப்ரேக் ஃபாஸ்ட் என்று அழைக்கிறோம்.
இரவு முழுவதும் வயிறு காலியாக இருப்பதால், உடலுக்கு சக்தியை அளிக்கும் க்ளுகோஸ்சின் அளவு குறைந்துவிடும். இதனை உடனடியாகத் திரும்பப் பெற காலை உணவு அவசியம்.
அவ்வாறு காலை உணவை உட்கொண்டால்தான், நாள் முழுவதும் உரிய சக்தியுடன், அசதியின்றி இயங்க முடியும் என்று அனைத்து வகையான மருத்துவமும் தெரிவிக்கின்றன.
'உடல் எடையைக் குறைக்கிறேன்' என்ற பெயரில் சிலர் காலை உணவைத் தவிர்ப்பதைப் பார்க்கலாம். இதனால், உடல் எடை கூடுகிறதே தவிர, குறைவதில்லை என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை.
காலையில் உணவு உட்கொள்ளாததால், மதியம் மற்றும் இரவு நேரங்களில் பசி அதிகரிக்கும்; உட்கொள்ளும் உணவின் அளவும் அனிச்சையாக அதிகரிக்கும். இதனால், கலோரி கூடி உடல் எடை அதிகரிக்குமே தவிர, எடை குறையாது.
எனவே, நாம் ஒவ்வொருவரும் காலை உணவைத் தவிர்க்காமல், ருசிக்க வேண்டியது அவசியம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக